எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் சிறுகதையை படிக்க இங்கே கிளிக்கவும்.
வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல திரைப்படங்களுக்கு பின், எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் "அழகர்சாமியின் குதிரை" சிறுகதையை தனது மூன்றாவது படமாக, திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் இந்த மாதிரி தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள் படமாக்கப்படும். திரையில் எப்படி வந்திருக்கிறது என்ற எதிர்பார்ப்போடுதான் படத்துக்கு சென்றேன்.
.
படத்த்தின் கதை இதுதான். 1980-கள். ஒவ்வொரு வருடமும், சித்திரை திருவிழாவுக்கு அழகர் ஆற்றில் இறங்கியதும், மழை கொட்டி, கிராமம் செழிக்கும். ஆனால் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக மழை பொய்த்துப்போனதால், அக்கிராமத்தில் வறட்சி. சாமிகுத்தம் இருக்கும் போல என்றெண்ணி, இந்த வருடம் சிறப்பாக திருவிழா நடத்தவேண்டும் என்று ஊர் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால் அழகரின் மரக்குதிரை வாகனம் திருடுபோய்விடுகிறது. அவர்கள் அந்த குதிரையை கண்டுபிடிக்க என்னென்ன செய்தார்கள், ஊர் திருவிழா நல்ல படியாக நடந்தததா, ஊரில் மழை பெய்ததா என்பதெல்லாம் மீதிக்கதை. எளிய கிராமம், ஊர் பெரிசுகளின் எகத்தாளம் மற்றும் பிற்போக்குத்தனமான கடவுள் நம்பிக்கை அதே நேரத்தில் எப்படியாவது சாமிக்கிட்ட வேண்டி மழையை கொண்டுவரவேண்டும் என்கிற நினைப்பு. இளந்தாரிகளின் கடவுள் நம்பிக்கையின்மை மற்றும் அசட்டு தைரியம் இதெல்லாம் கதையில் சிறப்பாக வந்து போகும். கூடவே ஒரு மாற்று சாதிக் காதல்.
.
இரண்டு பக்க சிறுகதையை இரண்டு மணி நேர திரைப்படமாக எடுக்கும்போது திரைக்கதையில் இன்னும் சில விஷயங்கள் தேவைப்படும். அதெல்லாம் வந்திருக்கிறது. ஊர் மைனர், அந்த காதல், குதிரைக்கு சொந்தக்காரனான அழகர்சாமியின் கதை, அவனின் காதல், ஓரிரு பாடல்கள் இதெல்லாம் வந்து போகிறது. ஆனால் ஒரு நல்ல சிறுகதை, கொஞ்சம் மோசமான திரைக்கதை மற்றும் நடிகர் தேர்வு காரணமாக கொஞ்சம் சொதப்பி விடுகிறது. நிறைய கதாப்பாத்திரங்கள் abrupt-ஆ இருக்கு. கூடுதலாக சேர்க்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் மட்டுமின்றி சிறுகதையின் கதாப்பாத்திரங்கள் கூட நிலைக்கவேயில்லை. குறிப்பாக 'ஊர் ப்ரெசிடென்ட்' பெருமாள் கதாப்பாத்திரம் நிற்கவேயில்லை. மழைக்காக உள்ளுக்குள் மருகும் ஒரு கதாப்பாத்திரம், படத்தில் கொஞ்சம்கூட அப்படி காட்டப்படவேயில்லை. கோடங்கி, ராமகிருஷ்ணன் கதாப்பாத்திரங்கள் மட்டும் கொஞ்சம் சரியாய் வந்திருக்கிறது.
.
படத்தின் இன்னொரு பிரச்சனை. நேட்டிவிட்டி (மண்ணின் தன்மை?!). படம் நடப்பது 1980-களில். கதை நிகழும் இடம் இந்த திருவிழா கொண்டாட ஆயத்தமாகும் கிராமம் மற்றும் அழகர்சாமியின் (அப்புக்குட்டி) கிராமம். இவர்கள் பேசும் மொழி, கொஞ்ச நேரம் மண்ணின் நிறத்திலும் கொஞ்சம் நேரம் சாதாரண நிறத்திலும் மாறி மாறி போகிறது. அது யதார்த்தத்தில் இருந்து கொஞ்சம் சறுக்கிறது.
.
ஆனால் உலகம் முழுதுமே, இந்த மாதிரி சிறுகதைகளை, நாவல்களை படமாக்கும் போது, அவை பொதுவாக சொதப்பிவிடும். இந்த படமும் கொஞ்சம் சறுக்குகிறது. வெண்ணிலா கபடிக்குழு எடுத்த சுசீந்திரனா இப்படத்தை எடுத்திருக்கிறார் என்று ஆச்சர்யம் வந்தது. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் இச்சிறுகதையை படிக்காமல் இருந்தால், நிச்சயம் இந்த படம் பிடிக்கும். படம் முழுதும் நல்ல நகைச்சுவை இருக்கிறது. மசாலாத்தனங்களையே பார்த்து சலித்த கண்களுக்கு இப்படம் ஆறுதலாய் இருக்கும்.ஒரு நல்ல முயற்சியை நாம் ஆதரிக்கவும் வேண்டும். எனவே படம் பாருங்க.
.
இப்படத்தில் கதை - பாஸ்கர் சக்தி என்று பெயர் போடும் போதும் வந்திருக்கலாம். அதை நான் சரியாக கவனிக்கவில்லை. ஆனால் இம்மாதிரி சிறுகதைகளை, நாவல்களை படமாக்கும் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். "எழுத்தாளர் aaaaaa-ன் 'bbbbbbb' சிறுகதையை/நாவலைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது" என்று தனி ஸ்லைட் போடுங்க. வெறும் கதை என்று போடாமல்.
.
அழகர்சாமியின் குதிரை - எளிய கிராமத்து குதிரை. இன்னும் கொஞ்சம் திரைக்கதையிலும், நடிக நடிகையர் தேர்விலும் கவனம் செலுத்தியிருந்தால் மிகச்சிறப்பாக வந்திருக்கும்.
.
15.05.2011





3 comments:
இளையராஜா, படத்துல தன்னோட இசை பார்வையாளர்களை கண்ணீர் விட வைக்கும்னு பேட்டி கொடுத்திருந்தாரே.. நல்லா இருந்திச்சா??
@JZ : பிண்ணனி இசை ஓகே.. :)
நன்றி..
நண்பரே,
வெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தாத தமிழ் சினிமா உலகம் என்ற தளம் இன்று முதல் இயங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆன த ப்ரீஸ்ட் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்டு வந்த கல்லறை உலகம் என்கிற ப்ரீஸ்ட் படமே முதல் விமர்சனம்.
கிங் விஸ்வா
தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்
Post a Comment