
இதமான குளிர் காலையில் கடற்கரையில் அமர்ந்து உதிக்கப்போகும் சூரியனுக்காக வானம் பார்ப்பது போன்றதொரு உணர்வை தரக்கூடியது நல்ல இசையுடன் கூடிய அழகான காதல் செறிந்த திரைப்படங்கள். இப்படமும் கிட்டத்தட்ட அதே போன்றதொரு உணர்வை தந்தது. காதல் ஒரு மாயம்; "நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணினேன்" என்று இத்திரைப்படம் முழுதும் வரும் கேள்வி காதலின் மாயத்தை பருகத்தருகிறது.
.
கார்த்திக் - ஜெஸ்ஸி; திரைப்படத்தின் கதை சென்னை போன்றதொரு நகரத்தின் வழக்கமான காதல் கதைதான். காட்சிகள் கூட ரொம்ப புதுமையாக இருக்காது. (ஒருவேளை உலகத்தில் இருக்கும் அனைவரும் காதலுக்கு ஒரே ஒரு சூத்திரம் மட்டுமே பயன்படுத்துகிறோம் போல). படம் முழுதும் விரவி பரவும் இசையும் அழகான ஒளிப்பதிவும் வசனங்களும் கார்த்திக் - ஜெஸ்ஸியின் காதலை படம் முழுதும் நிரப்புகிறது.





