Choyonghan kajok (1998), The Foul King (2000), 3 Extremes II (2002) ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் Kim Ji-Woon-க்கு வணிகரீதியாக பெரும் வெற்றிபெற்று மேலும் உலகளாவிய அறிமுகத்தையும் பெற்றுதந்த படங்கள், இந்த இருதிரைப்படங்கள். மிக நேர்த்தியான ஸ்டைலான இயக்கம் இவருடையது.
.
A Tale of Two Sisters (2003)
ORIGINAL TITLE : 장화, 홍련 (aka) Janghwa, Hongryeon
IMDB RATING : 7.5/10
இந்த படம் ஒரு Psychological Horror..
.
தன் இரு பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வருகிறார் தந்தை. தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது செவிலியாக வந்தவள் இப்போது சித்தியாகிவிட்டாள், தாயின் மறைவிற்கு பின். சித்தியின் கொடுமை, குறிப்பாக இளைய பெண் மீது. தட்டிகேட்காத தந்தை. அக்காவினால் தன் தங்கையை காப்பாற்றமுடிந்ததா என்பது மீதிக்கதை. (நம்ம ஊர் கதை மாதிரி இருக்குதேன்னு யோசிக்கறீங்களா.. அவங்களும் அப்பா, அம்மா என்று தானே பெற்றோரை அழைக்கிறார்கள்..)
.
95% படம் ஒரு அழகான நதிக்கரை அருகில் இருக்கும் ஒரு தனித்த வீட்டில் மட்டுமே நிகழ்கிறது. நான்கே கதாப்பாத்திரங்கள், கூடவே ஒரு பேய். Horror படம் என்பதால் படம் முழுக்க இருட்டு, திடீர் முகங்கள், பின்னணி இசை என்பதெல்லாம் இப்படத்தில் இல்லை. மேலும் படம் முழுக்க முழுக்க அவ்வீட்டின் அந்த நான்கு பேரின் மனம் சார்ந்தே போய்க்கொண்டிருக்கும் வேளையில், ஒரு ட்விஸ்ட். எனக்கு பெரிதாக அந்த ட்விஸ்ட் ஈர்க்கவில்லை என்றாலும் (ஏனென்றால் அந்த மாதிரி ட்விஸ்ட் கொண்ட சில படங்கள் ஏற்கனவே பார்த்திருப்பதால்), அதன் பின்பான காட்சிகள், சம்பவங்கள் மிக சிறப்பான இயக்கத்துக்கு சான்று.
.
செய்யமுடியாமல் போன ஒன்றின் குற்றஉணர்ச்சியிலிருந்து விடுபட முனைகிற இளமனத்தின் போராட்டம் இந்த படம். அவ்ளோ நேர்த்தியான இயக்கம், கேமரா கோணங்கள், இதையெல்லாம் விஞ்சும் மிக அருமையான பின்னணி இசை. வணிகரீதியில் மிகப்பெரும் வெற்றிபெற்ற திரைப்படமிது.
.
தென்கொரிய படங்கள் எப்போதும் ஹாலிவுட்டுக்கு சவாலாய் இருப்பவை. அவர்களின் திரைப்படங்களின் நேர்த்தியை கண்டு வியந்து ஹாலிவுட்டில் மீண்டும் ரீமேக்கி கொண்டாலும் அந்த தரம் வருவதேயில்லை. My Sassy Girl படம் மாதிரி இந்த படத்தையும் ஹாலிவுட்டில் ரீமேக்கினார்கள் The Uninvited (2009) என்ற பெயரில்.
.
.
A Bittersweet Life (2005)
ORIGINAL TITLE : 달콤한인생 (aka) Dalkomhan insaeng
IMDB RATING : 7.8/10
இந்த திரைப்படம் ஒரு Action Crime Thriller.
.
தென்கொரிய திரைப்படங்களில் பழிவாங்கல் மிக சிறப்பாக கையாளப்பட்டிருக்கும் (நன்றி: அய்யனார்). இந்த படமும் அதேதான். ஒரு மிகப்பெரிய தாதா (தாத்தா) மாதிரியான முதலாளியின் நம்பிக்கையான வேலைக்காரன். அவர் மூன்று நாட்கள் வெளிநாடு செல்லும் முன்பு தன் இளவயது காதலியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இவனிடம் ஒப்படைக்கிறார், அந்த இளம் காதலி மீது இவருக்கு சந்தேகம் இருப்பதால். அந்த பெண்ணை பார்த்துக்கொள்ளும் போது இவனுக்குள் ஒரு சின்ன சலனம். அதன் மிகமுக்கிய காரணம், அந்த பெண்ணும் அவள் இசையும். அவளின் இசையில் அவன் மிகுந்த மகிழ்ச்சியை தனக்குள் உணர்கிறான். என்பதனால் அந்த பெண்ணின் காதலை, தன் முதலாளியிடம் மறைக்க முயல, அதை கண்டுகொண்ட அவர் இவனை கொல்லமுயற்சிக்க, தப்பிக்கும் இவன், அவரை பழிவாங்குவதல் மீதிப்படம்.
.
இவனை துன்புறுத்தி கொல்ல முயற்சிப்பது, அவன் அங்கிருந்து தப்பிக்க முயலும் ஒரு ஐந்து நிமிட தொடர் சண்டைக்காட்சி (Oldboy திரைப்படத்தில் அந்த கிடைமட்ட சண்டைகாட்சி எனக்கு ஏனோ ஞாபகம் வந்தது), அந்த பெண் இசைக்கும் இரண்டு காட்சிகள், கடைசி சண்டைகாட்சிகள் எல்லாம் அழகான இயக்கத்தின் உச்சம். கொரிய திரைப்படமென்பதால் சண்டைகாட்சிகள் ரத்தமும் சதையுமாகவே இருக்கும், பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம். ஆனால் படம் பார்க்க துவங்கினால் இடையில் நிறுத்த முடியாது, அந்த அளவுக்கு நேர்த்தியான திரைக்கதை. படத்தின் இசையை பற்றி என்ன சொல்ல. இந்த இணைத்திருக்கும் வீடியோவை ஒரு முறை பார்க்கவும். (இவ்வளவு அழகான பெண்ணுக்காக, அந்த இசைக்காக, நிச்சயம் நூறு பேரை கொல்லத்தகும் :) #படம் பார்த்த எபக்ட்)
.
A Bittersweet life - Music scene
இலைகள் அசைகிறதா.. காற்று இலைகளை அசைக்கிறதா.. மனம்தான் அசைகிறது.. அதுதான் இந்த நாயகனுக்கும் நேர்ந்தது.
.
மிக அற்புதமான நேர்த்தியோடு இயக்கப்பட்ட திரைப்படங்கள் இவ்விரண்டும். நிச்சயம் பாருங்க. சமீபத்தில் இவரின் அடுத்த படமான I Saw the Devil (2010) வெளிவந்திருக்கிறது. கூடியவிரைவில் பார்க்கவேண்டும்.
.
15.09.2010





8 comments:
//அவங்களும் அப்பா, அம்மா என்று தானே பெற்றோரை அழைக்கிறார்கள்..//
ஆமாம்,நன்றாக கவனித்தீர்கள் என்றால்,நம் கலாச்சாரமும் அவர்களதும் பல விசயங்களில் ஒன்றே என்று தெரியும்.
//தென்கொரிய படங்கள் எப்போதும் ஹாலிவுட்டுக்கு சவாலாய் இருப்பவை. அவர்களின் திரைப்படங்களின் நேர்த்தியை கண்டு வியந்து ஹாலிவுட்டில் மீண்டும் ரீமேக்கி கொண்டாலும் அந்த தரம் வருவதேயில்லை.//
சத்தியமான வார்த்தை.இங்க சொன்னா எவன் கேக்குறான்?
A Bittersweet life பார்க்கலை இது வரை.இதோ பார்த்துடலாம்.
//இலைகள் அசைகிறதா.. காற்று இலைகளை அசைக்கிறதா.. மனம்தான் அசைகிறது.. அதுதான் இந்த நாயகனுக்கும் நேர்ந்தது.//
சூப்பர். :)
@ILLUMINATI : A Bittersweet life பார்த்துடுங்க. நன்றிங்க. :)
நல்ல பகிர்வு.த்னித்தனியா 2 பதிவு போட்டிருக்கலாமே?
உங்களின் இடுகையை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசிக்கவும்
A Tale of Two Sisters பார்த்தாச்சு, A Bittersweet Life டவுன்லோட் போட்டாச்சு...
@சி.பி.செந்தில்குமார் : நன்றிங்க. இரண்டுமே தொடர்புடையவைதானே என்பதனால், இன்னொரு பதிவு போடற வேலை மிச்சம். எழுத சோம்பேறித்தனம்.. :)
@மோகன் குமார் : நன்றிங்க வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்க்காக.. :)
@Baby ஆனந்தன் : நிச்சயம் பாருங்க. நன்றிங்க.
கொரியன் ஹாரர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் படம் முழுசா பார்க்கலை மீண்டும் இரண்டையும் சேர்த்து பார்க்கிறேன். நன்றி! இன்னும் நிறைய ஹாரர் படங்கள் பற்றி எழுதுங்கள்!
கொரிய சினிமாக்கள் ரசிகர் பட்டியல் நீண்டுகிட்டே போவுது. சந்தோசமா இருக்கு. அவிங்களும் காதலானாலும்,பழிவாங்கனாலும் பட்டய கெளப்புவாங்க.
இரண்டு பட அறிமுகத்திற்கும் நன்றி.
Post a Comment