Sunday, June 28, 2009

நாடோடிகள் - திரைவிமர்சனம்


நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்..
.

சுப்ரமணியபுரம் வெற்றிக்கு பின், சசிக்குமார் நடித்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வந்திருக்கும் படம்தான் நாடோடிகள். சுப்ரமணியபுரம் அளவுக்கு இல்லாட்டியும் செமையா இருக்கு. படம் பெயர் போடும்போதே பின்னணியில் "சம்போ சிவ சம்போ" பாடலும் இசையும் சும்மா அதிர வைக்கிறது.
.
கருணாவும் (சசிக்குமார்) அவன் நண்பர்களும், அவர்களது குடும்பமும் வசிப்பது ராஜபாளையத்தில். கருணாவின் பள்ளிகால நண்பன் சரவணன். சரவணன் சொந்த ஊர் கன்னியாகுமரி. சரவணின் காதலி நாமக்கல். சரவணனும், அவன் காதலியும் பெரிய இடத்து பசங்க. வீட்டில் பிரச்சனை பண்ண, சரவணன், கருணாவிடம் சொல்ல, கருணாவும் அவன் நண்பர்களும் பயங்கர பிரச்சனைகளுக்கு நடுவில் திருமணம் செய்துவைக்கின்றனர். இதனால் பெரிய மனிதர்களை பகைத்து கொண்டதனால், இந்த நண்பர்களுக்கு காதல் இழப்பு, மரணம், உடல் ஊனம் என பல. இருந்தாலும் நண்பன் காதலை சேர்த்து விதத்தில் திருப்தி அடைகின்றனர். ஆனால் திருமணம் செய்து கொண்டவர்களுக்கோ, சில நாட்களில் காதலும் திருமணமும் கசந்து போக, அவரவர் வீட்டுக்கு திரும்பி விடுகின்றனர். விவாகரத்து வாங்க வேலையை துவங்குகின்றனர். கஷ்டப்பட்டு காதலை சேர்த்துவைத்த நண்பர்கள் என்ன கிறுக்கு பசங்களா? காதல் என்ற பெயரில் உடம்பு சுகத்துக்கு அலைபவர்கள் காதலையும் நட்பையும் களங்கபடுத்திவிடுகிறார்களே அவங்களை என்ன செய்யலாம்?
.
உங்கள் நண்பனின் காதல் உண்மையானதாக இருந்தால் உதவி செய்யுங்க. சும்மா டைம் பாஸ் என்றால், ரூம் போட்டு கொடுங்க. கொய்யால.
.
நண்பனின் திருமணம் முடிந்ததும் அவர்களை பஸ் ஏற்றி விடும்போது, கையில் இருக்கும் பணம், கழுத்தில் இருந்த செயின் எல்லாவற்றையும் கழற்றி கொடுக்கும் கருணா. கருணாவின் நண்பனுக்குகாக எதையும் செய்யும் நண்பர்கள். கருணாவின் நண்பன் போலீசில் சிக்கும் போது, மருத்துவ செலவுக்குகாக பணம் கொடுத்து உதவுபவர்கள், காதலை சேர்த்துவைக்க கார், தங்க வீடு என எல்லாரும் மாற்றி மாற்றி உதவி செய்றாங்க. கலக்கல்.
.
கருணாவாக சசிக்குமார் நன்றாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல almost அனைத்து கதாபாத்திரங்களும். கருணாவின் முறைப்பெண் இன்னொரு 'சுப்ரமணியபுரம்' சுவாதி. கருணாவின் நண்பர்களாக வரும் இருவரும் செமையா பண்ணி இருக்காங்க. இடைவேளைக்கு முந்தைய அந்த திருமண சேசிங் செம செம. அதிலும் கருணாவின் நண்பர் காதில் அடிவாங்குவது யப்ப்ப்ப்பா. எனக்கு காதில் 'கொய்ங்ங்ங்ங்' என்றது. இடைவேளை முடியும் போது தியேட்டரில் எல்லாருக்குள்ளும் பெரிய அதிர்வுகள். கொஞ்ச நேரத்துக்கு அப்பறம்தான் எல்லாரும் எழுந்து வெளியே போக ஆரம்பிச்சாங்க. கருணாவின் நண்பர்களின் அப்பா, லோக்கல் அரசியல்வாதி, கஞ்சா கருப்பு எல்லாருமே நல்லா பண்ணியிருக்காங்க.
.
ஹீரோ, வில்லன், காதலி, பிரச்சனை, ஹீரோ ஜெயிக்கிறார் என்ற கதைகள் ரொம்ப போரடிக்குது. ஆனா நாலு நண்பர்கள் என்று துவங்கும் படங்கள் நல்லா இருக்கு. சென்னை-28, சுப்ரமணியபுரம், சரோஜா, பசங்க, இப்போது நாடோடிகள்.
.
படத்தின் மிக அருமையான விஷயங்கள், படத்தின் லோகேஷன்ஸ் மற்றும் பின்னணி இசை. இசையமைப்பாளர் 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' சுந்தர் C பாபு. தமிழ் சினிமாவில் பின்னணி இசை சேர்ப்பை விட, பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாங்க என்பதில் எனக்கு பெரிய வருத்தமுண்டு. ஆனால் சுந்தர் C பாபு, பின்னணி இசை சேர்ப்பில் கலக்குகிறார். நிறைய வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. 'சம்போ சிவ சம்போ' அதகளம். மற்ற பாடல்கள் கொஞ்சம் அனாவசியம்.
.
சமுத்திரக்கனி, இப்படியே டாப் கியர போட்டு தூக்குங்க வருங்காலத்தில்.
.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
.
படத்தின் முதல் பாதி - அட்டகாசம்.
இரண்டாம் பாதி - கொஞ்சம் ஸ்லோ. ஆனா நல்லா இருக்கு.
மொத்தத்தில் நாடோடிகள் - நல்ல நண்பர்கள் - கலக்கல்.


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
28.06.2009

Friday, June 26, 2009

இசை சாகசக்காரன் Michael Jackson (1958 - 2009)


சிலரெல்லாம் இறக்கும் வரை எனக்கு தோன்றுவதே இல்லை, இவர்களுக்கும் இறப்பு வருமென்று. அவர்களும் இறப்பின் கோட்டை தாண்டாத வெறும் மனிதர்கள் என்பது.

இதோ இறந்துவிட்டான் அந்த மாபெரும் இசை சாகசக்காரன். அடுத்தமாதம் பிரம்மாண்ட விடைபெறுதல் இசை நிகழ்ச்சிக்கான (50 concerts) டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கலைஞன் அதற்கு முன்பாகவே விடை பெற்றுவிட்டான், அவசரக்காரன்.

அசாத்தியமானவன். கின்னஸ் சாதனைக்காரன். 75 கோடி ரெக்கார்டுகள் விற்று தீர்ந்த இசையின் சொந்தக்காரன். 13 கிராமி விருதுகளுக்கு சொந்தக்காரன். நடன அசைவுக்கு காப்புரிமை வாங்கி வைத்திருக்கும் கலைஞன். நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி, அமைப்புகள் மூலம் உதவி செய்தவன். பொது வாழ்க்கையில் மன்னன்.

Wiki Link

Michael's Jackson Dangerous

கண்ணீரோடு வழி அனுப்புகிறேன். உனது ஆன்மா சாந்தி அடையட்டும்.

26.06.2009

Tuesday, June 23, 2009

Ferris Bueller's Day Off [1986] - தினசரிகளிலிருந்து தப்பித்தல்..



IMDB Rating : 7.9/10

இப்போது வரும் teen comedy வகை படங்கள் உருவத்தை, நிறத்தை, நீளத்தை, அரசியல் தலைவர்களை, செலிப்ரிட்டிகளை, அமெரிக்க கலாச்சாராத்தை, அமெரிக்க டிவி ஷோக்களை கலாய்த்து, டாப்லெஸ் காட்சிகளோ/உடலுறவு காட்சிகளோ இல்லாமல் வருவது வெகு குறைவு.

ஆனால் இதெல்லாம் இல்லாமல், வெகு நகைச்சுவையாக, இளம் பருவத்து நட்பையும் காதலையும், இளம்பிராயத்து திரில்லையும் அழகாக காட்டிய படம்தான் 1986 இல் (நான் பிறந்த வருடத்தில்) வெளியான படம்தான் Ferris Bueller's Day Off.
.
Ferris Beuller டிவி ஷோவை தொடர்ந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற திரைப்படம். நாயகன் Ferris Bueller வசந்தகாலம் துவங்கியிருக்கும் நேரத்தில், ஒரு பள்ளி நாளை மட்டம் போட்டுவிட்டு, தன் நண்பன் மற்றும் காதலியோடு, சிக்காக்கோ நகரில் இனிமையாக கழிக்கும் ஒரு நாளைய நிகழ்வுகள் தான் Ferris Bueller's Day Off.
.
High School படிக்கிற நம்ம நாயகன் Ferris Bueller, உடம்பு சரியில்லைன்னு பொய் சொல்லி பெற்றோரை நம்ப வைத்து பள்ளிக்கு மட்டம் போடுகிறான். பின்பு பெற்றோர்கள் வேலைக்கு சென்றதும், அதே பள்ளியில் படிக்கும் தன் அக்காவும் பள்ளிக்கு சென்ற பின், அன்றைய நாளை தன் நண்பனுடன், தன் நண்பனின் அப்பாவின் Ferrari காரையும் எடுத்துக்கொண்டு, அதே பள்ளியில் படிக்கும் தன் காதலியையும் பிக்கப் செய்துகொண்டு சிக்காகோவுக்கு வந்து கொண்டாடும் அந்த ஒரு நாளின் (காலை எட்டு மணியில் துவங்கி மாலை ஆறு மணி வரையிலான) நிகழ்வுதான் கதை.
.
தன்னை எப்படியாவது கையும் களவுமாக பிடிக்க நினைக்கும் பிரின்சிபலுக்கும் நாயகனுக்கும் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி ஷோ. மேலும் தன் அக்கா, தன் பெற்றோர், தன் நண்பன், தன் காதலி எல்லாரையும் சமாளிக்கும் நாயகனின் வேகமும், விவேகமும் செம கலக்கலா இருக்கும். சிரிச்சிகிட்டே இருக்கலாம். Even குடும்பத்தோடு. இது படத்தின் மேலும் ஒரு ஸ்பெஷல்.
.
நாயகனின் narration-ஆக அவனின் ஐடியாக்களை சொல்வதும் கலக்கலாக இருக்கும். திரைக்கதையில் பின்னியெடுக்கும். [இயக்குனர் John Hughes-ன் மற்ற பல படங்களும் நகைச்சுவை படங்களே. Planes, Trains & Automobiles (1987), Home Alone series, Christmas Vacation (1989) குறிப்பிடத்தகுந்தவை.] தன் பெற்றோரை தூங்குவதாக நம்பவைக்கும், தான் பள்ளிக்கு மட்டம் போட்ட நாட்களை பள்ளியில் மாற்றுவது முதல் ஆறு மணி முடியப்போகும் நேரத்தில், தன் பெற்றோர் வீட்டுக்கு வரும் நேரம், தன் அக்கா வீட்டுக்கு பள்ளி முடிந்து வரும் நேரம், தன் பிரின்சிபல் ஏற்கனவே வீட்டில் இவனை பிடிக்க நினைக்கும் நேரம், அந்த கடைசி நிமிட காட்சிகள் வரை வேகமும் விறுவிறுப்பும், இனிமையும் மகிழ்ச்சியும் இருக்கும். இறுதியில் பெயர் முடியும் வரை படம் பாருங்கள்.
.
Ferris Bueller's Day Off (1986) - ஒரு நாளின் கொண்டாட்டம்.
உங்களுக்கும் உங்கள் தினசரி வாழ்க்கை போரடிக்கும் பட்சத்தில், உங்களின் ஒரு நாளை இப்படியாக கொண்டாடுங்கள்.


IMDB LINK

My Rating : ****

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
23.06.2009

Friday, June 19, 2009

The Girl Next Door [2004]- Teen Comedy (18+)


IMDB Rating : 6.9/10
.


ரொம்ப சீரியசான படங்களை மட்டுமே எழுதுவதாக தோன்றுவதால், ஒரு மாற்றத்திற்காக Teen Comedy வகை படமொன்று. அமெரிக்க டீன்-ஏஜ் இளசுகளை குறிவைத்து எடுக்கப்படும் இவ்வகை அமெரிக்கத் திரைப்படங்கள் முழுக்க முழுக்க இளமையின் கொண்டாட்டங்கள். இந்த படங்களின் தீம் This is your right age to enjoy life..

இப்போது நம் ஊரிலும், இந்தப் படங்களை அடிப்படையாக கொண்டு, Hi-Class/Multiplex இளைஞர்களை குறிவைத்து சக்கரக்கட்டி, குளிர் 100 எனப் படங்கள் வரத்துவங்கிவிட்டன. இந்த படங்கள் யூத்துகளுக்கானவை மட்டுமே. நீங்கள், வயசு அதிகமானோர், கலாச்சாரக் காவலர்கள், சிறந்த உலகசினிமா பார்க்க விரும்புவோர், நுண்ணரசியல், குறியீடுகள் தேடிப்பார்ப்போர் எனில் இந்த படங்கள் உங்களுக்கானவையாக இருக்க வாய்ப்பில்லை..
.
High School-ஐ நல்ல படியா முடிச்சி, Georgetown University-ல் அரசியல் படிக்க விரும்பும் நாயகனுக்கு scholarship தேவை. அதற்காகவும் தன்னை தயார் செய்துக்கொண்டிருக்கும் நாயகன் (Emile Hirsch), செம படிப்ஸ். இவருக்கும் எல்லா ஆசையும் உண்டு. ஆனா தைரியமும் நேரமும் கிடையாது. இவரின் மற்ற இரு நண்பர்களும் இவரை போலவே. இச்சமயத்தில்தான் நாயகனின் பக்கத்துக்கு வீட்டில் இளம்பெண்ணொருத்தி (Elisha Cuthbert) குடியேறுகிறாள். பார்த்தவுடன் காதல் பற்றிக்கொள்ளும் அழகி அவள். இவனுக்குள் ஏதோ ஒரு மாற்றம். இவளுக்கும் பிடித்திருக்கிறது. பழக துவங்குகிறார்கள். படிப்ஸ் பையனை, adventure செய்யும் பையனாக மாற்றுகிறாள். கட் அடித்தல் முதல் ஊர் சுற்றுதல் வரை. பின்பு ஒரு கட்டத்தில் தெரியவருகிறது, அப்பெண் ஒரு Ex Porn Star என்று. பின்பு ஊடல்கள். அப்பெண் கோபித்துக்கொண்டு தன் பழைய வேலைக்கே செல்ல முடிவெடுக்கிறாள். பிந்தைய புரிதல்கள், Porno producer -உடன் மோதல், தன் காதலை மீட்டெடுப்பது, high school prom, porn movie making என நகைச்சுவையாகவும், ரொமாண்டிக்காகவும், கிக்காகவும், கவர்ச்சியாகவும் நகரும் திரைப்படம்.
.
Girl Next Door - நாயகி Elisha Cuthbert-க்காகவே படம் பார்க்கலாம். ;)
வீக்கெண்ட் துவக்கத்திற்கு சரியான படம்.. :)


IMDB LINK

My Rating : ***

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
19.06.2009

Tuesday, June 16, 2009

Into the Wild [2007] - அடையாளங்களை தொலைத்தல்..


IMDB Rating : 8.2/10 :: Top 250: #143
.
Christopher McCandless (Feb 12, 1968 - Aug18, 1992) வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்ட Into the Wild (1996) by Jon Krakauer புத்தகத்தைத் தழுவி 2007-ல் வெளிவந்த திரைப்படம் தான் Into the Wild. இத்திரைப்பதை இயக்கி இருப்பது நடிகரும் இயக்குனருமான Sean Penn. (Sean Penn, கடந்த ஆஸ்கரில், Milk படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டி சென்றவர்)
.
வீட்டில் பெற்றோரிடம் நிலவும் புரிதல் இல்லாமை, அன்பு தங்கை, பட்டப்படிப்பு, இலக்கியம் மீதான ஆர்வம், பொருள் உலகம் மீதான வெறுப்பு, வாழ்க்கையை உட்பொருளை தேடிப்பார்க்கும் ஆர்வம், வாழ்க்கையை ஓட்டாமல் வாழ்ந்து பார்க்கும் ஆர்வம் காரணமாக, adventures மீதான ஈர்ப்பு காரணமாக, இருபத்தி இரண்டு வயது Chris, தன்னுடைய அடையாளங்களை அழித்தொழித்து (license, credit cards, social security number and etc.,) வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஒரு வழிப்போக்கனாக. அவன் இலக்கு அலாஸ்கா. காடுகளுக்குள் தொலைந்து போவது.

கையில் இருக்கும் மிச்சம் மீதி பணத்தை கூட எரித்துவிட்டு புறப்படுகிறான். வழியில் பல மனிதர்களை சந்திக்கிறான். அவன் வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பது இத்திரைப்படம்.
.
படத்தை பார்க்க விரும்புபவர்கள் இந்த பத்தியை தவிர்த்தல் நலம்.

அவன் பயணத்தை பதிவு செய்த புத்தகம் போலவே, படத்திலும் அவன் பயணங்கள் chapter-களாக பதிவு செய்யப்படுகிறது. வீட்டில் இருந்து வெளியேறி அவன் புறப்படும் போது முதல் chapter பிறப்பாக பதிவு செய்யப்படுகிறது. தன் பெயரைக்கூட மாற்றிக்கொள்கிறான் Alexander Supertramp என்று. ஒரு கணவன்-மனைவியை சந்திக்கிறான். அவர்களோடு ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு செல்கிறான், அக்கணவன்-மனைவிக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்திவிட்டு. பின்பு அங்கிருந்து கோதுமை வயலில் வேலை, அம்மனிதர்களோடு நட்பு, பின்பு அங்கிருந்து ஒரு பயணம், காற்றாற்று வெள்ளத்தில் ஒரு adventure பயணம், காதலர்களை சந்தித்தது, பின்பு ஒரு நகரம், பின்பு திருட்டு ரயில் பயணம், பின்பு ஒரு பெண்ணுடன் சிறு நட்பு, ஒரு ரிட்டயர்ட் ஆன வயதான மனிதருடன் பாசம், என தொடர்ந்து அலாஸ்காவை அடைகிறான். அலாஸ்காவில், அப்பனிக்காலத்தில், மலைகள் மீதெல்லாம் பயணித்து, ஓரு பழைய பஸ்ஸை வந்து சேர்கிறான். அந்த பஸ்ஸை Magis Bus என்று பதிவு செய்யப்படுகிறது.அங்கு சில வாரங்கள் தங்கி, பனிக்காலத்திற்கு பிந்தைய வசந்த காலத்தில் திரும்ப எத்தனிக்கும் போது, திரும்ப முடியாத சூழ்நிலை. பனியெல்லாம் உருகி, பெரும்வெள்ளமாக மாறி அவ்விடத்தை தனிமைப்படுத்துகிறது. உணவு இல்லாமல் போவது, விஷச்செடியை தின்று, Aug18, 1992-ல் அந்த Magic Bus-ல் உயிர் துறக்கிறான்.
.
Emile Hirsch, Chris ஆக வாழ்ந்திருக்கிறார். பயணம் துவங்கியதில் இருந்து மெலிந்து கொண்டே போகிறார். அதுவும் அலாஸ்காவில் உணவின்றி, அதிகபட்சமாக மெலிந்து போகும்போது, அவர் ஈடுபாட்டை புரிந்து கொள்ளமுடிகிறது.
.
2007-ல் வெளிவந்த சிறந்த படங்களுள் இதுவும் நிச்சயம் ஒன்று. இரண்டரை மணி நேர திரைப்படம். நிறைய பகுதிகளில், நிறைய காலநிலைகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு, மிகச்சிறந்த பின்னணி இசை, சிறந்த இயக்கம், நல்ல வசனங்கள், ஒரு சிறந்த திரைப்படம். செல்லுலாய்ட் கவிதை, இந்த Into the Wild.
.
இருத்தல் மீதான மற்றும் பொருளுலகம் மீதான கேள்விகளை முன்வைக்கிறது இத்திரைப்படம். பணம் மற்றும் அதிகாரம் மாயை என்கிறது.
.
Some people feel like they don't deserve love. They walk away quietly into empty spaces.
.
இவர்தான் அந்த உண்மையான சாகச விரும்பி Christopher Johnson McCandless.




IMDB LINK

My Rating : *****

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
16.06.2009

Sunday, June 14, 2009

ஆயிரத்தில் ஒருவன் - இசை அறிமுகம்..


இசையை கேட்க மட்டும்தான் எனக்கு தெரியும். இசை விமர்சனம் எல்லாம் சரியாக வராது. செல்வராகவன் எனக்கு மிக மிக மிக பிடித்த இயக்குனர் என்பதால், இன்று ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளியாயிருப்பதால், இது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இசை அறிமுகம்.

செல்வா- யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணியை நாமறிவோம். அத்தனை பாடல்களும் அனைவருக்கும் உளப்பூர்வமாகவும் நெருக்கமான பாடல்களாக அமைந்தன. இம்முறை இந்நண்ர்பர்களுக்கிடையேயான சிறு பிரிவுக்காரணமாக செல்வா- G.V.பிரகாஷ் - செல்வா & வைரமுத்து கூட்டணியாக வந்திருக்கிறது இந்த 'ஆயிரத்தில் ஒருவன்'.

படத்தின் கதை இப்படியாக இருக்கக்கூடும். சில நூற்றாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தின் பதிவாக இருக்கும் (சோழ அரசு, தஞ்சை, இசை, படையெடுப்பு, இனம் அழிப்பு, வரலாற்றின் கருப்பு பதிவு, மந்திரம், எதுவோ தெரியல). வரைபடம் வைத்துக்கொண்டு வரலாறை அறியமுற்படும் ஒரு குழுவின் பார்வையில் நிகழும் என்று நினைக்கிறேன். எனவே பாடல்கள் வித்தியாசமா இருக்கணும். இருக்கு.

அதிகமான பாடல்களை செல்வராகவனே எழுதி இருக்கிறார். G.V.பிரகாஷ் தவிர குழு இசையும் இருக்கு. ஆண்ட்ரியா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் பாடல்களை பாடியிருப்பது வித்தியாசமாயிருக்கிறது. (செல்வாவும், கார்த்தியும், ரீமாசென்னும் பாடியிருக்கலாம்.. :)) என்பதனால் இந்த இசைத்தொகுப்பு ரொம்ப வித்தியாசமா, வெரைட்டியா இருக்கு.


1. ஓ ஈசா
பாடியவர்கள் : கார்த்திக், ஆண்ட்ரியா
பாடல் : செல்வராகன் & ஆண்ட்ரியா

இப்பாடல் கிட்டத்தட்ட ஒரு பக்தி பாடலின் வெஸ்டர்ன் ரீமிக்ஸாக இருக்கிறது. பாடலும் பக்தி வெஸ்டர்ன் வடிவத்தில். கட்டுடைப்பு போல. கலக்கலா இருக்கு.

2. மாலை நேரம்
பாடியவர்கள் : ஆண்ட்ரியா, G.V.பிரகாஷ்
பாடல் : செல்வராகன்

மெதுவா கிட்டாரோட அழகான ஒரு மெலடி. வரிகளும் அழகு.

3. உன் மேலே ஆசைதான்
பாடியவர்கள் : தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், ஆண்ட்ரியா
பாடல் : செல்வராகன்

கிக்கான ஒரு பாடல். நல்லா இருக்கு.

4. The King Arrives.
Performed by Neil Mukheriee matrum Madras Augustin Choir

மேலே இருக்கும் குழுவின் இசை போல. தீம் மியுசிக் மாதிரி. ரிங்க்டோனா வைச்சிக்கலாம்.

5. தாய் தின்ற மண்ணே (The Cholan Ecstacy)
பாடியவர்கள் : விஜய் ஜேசுதாஸ்
பாடல் : வைரமுத்து

பெரியப்பாடல். கர்நாடக சங்கீதம். தமிழ் வரிகள். ஒரு மன்னனின் கதறல் போல. ரொம்ப மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு.

6. பெம்மானே
பாடியவர்கள் : P.B.ஸ்ரீநிவாஸ், பாம்பே ஜெயஸ்ரீ
பாடல் : வைரமுத்து

இந்த பாடல் ஒரு ஓலம். சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சையில் பதிவு செய்யப்படும் ஓலமாக இருக்கிறது. மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு.

7. Celebration of Life
Performed by Naveen

மனதை ஊடுருவும் இசை.

8. தாய் தின்ற மண்ணே (Classical version)
பாடியவர்கள் : P.B.ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன்
பாடல் : வைரமுத்து

பெரியப்பாடல். தமிழ் இலக்கணம். கர்நாடக சங்கீதம். தமிழ் வரிகள்.

9. இந்த பாதை
பாடியவர்கள் : G.V.பிரகாஷ்
பாடல் : செல்வராகன்

G.V.பிரகாஷ் குரலில் ஒரு பெப்பி. அழகான ரசனையான வரிகள்.

10. ஓ ஈசா Club Mix
Featuring Bigg Nikk

ஈசாவின் மிக்ஸ். அதிரடி.

'தாய் தின்ற மண்ணே', 'பெம்மானே' வரலாற்று பாடல்கள். மனதை பிழியும் பாடல்கள். மற்றவை நிகழ்க்கால பாடல்கள் போலும். கேட்டு பாருங்க. செல்வராகவன் Rocks.


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
14.06.2009

Saturday, June 13, 2009

மாசிலாமணி - திரைவிமர்சனம்


"தங்கத்தலைவி" "சின்ன அசின்" சுனய்னா வாழ்க..
அகில உலக சுனய்னா தலைமை ரசிகர் மன்றம்.
சென்னை.
.

இந்த படம் சரியில்லை என்று நேற்றே ரெவியு படித்தபின்பும் சுனய்னாவுக்காக இன்று மாசிலாமணி படத்திற்கு நண்பர்களோடு சென்றேன். :)
.
தமிழ் சினிமாவில் படங்களின் தரம் குறைந்து கொண்டே இருக்கிறது. சமீபத்திய அயன், ஆனந்த தாண்டவம், சர்வம், தோரணை, இப்போது மாசிலாமணி என்று கொடுமை பண்றாங்க. "பசங்க" மாதிரியான சில படங்கள் மட்டும் நம்பிக்கையா இருக்கு.
.
நீங்க கிரேசி மோகனின் மாது சீனு நாடகங்கள், விஜயோட துள்ளாத மனமும் துள்ளும் பார்த்துருக்கீங்களா? இந்த படத்தோட அடித்தளம் இதுதான். நம்ம லோக்கல் மாசியை, அவன் தப்பை தட்டி கேட்கும்போதெல்லாம் பார்த்து தொலைத்து, அவனை ரவுடி என்று நினைக்கிறாள் நாயகி. நாயகியை முதல் முறை பார்த்தபோதே காதலிக்க ஆரம்பித்த நாயகன், மணி என்ற பெயரில், நாயகியின் குடும்பத்தாரின் மனதையும், பின்பு நாயகியின் மனதையும் கொள்ளையடிப்பது கதை. ஆனால் மாசியும் மணியும் ஒன்றுதான் என்று நாயகியிடம் நிரூபிக்க முயலும், நாயகியை திருமணம் செய்ய விரும்பும் வில்லன், போலீஸ்காரன், நாயகியின் குடும்ப நண்பன். இரண்டாம் பாதியில் நாயகனுக்கும் போலீஸ்காரனுக்குமான ஒரு டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு.
இம்புட்டுதான் படம். இதை ரசிக்கிற மாதிரி சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும். ஆனா சொல்லல. :(

படத்தின் காட்சிகளெல்லாம் ஹீரோ ஓபனிங், ஹீரோவின் காலனி, ஹீரோயின் இன்ட்ரோ, ஹீரோயின் பண்பாட்டு குடும்பம் (லூசுக்குடும்பம்), ஹீரோவின் நண்பர்களோடு காமெடி, தனிக் காமெடி ட்ராக், பாட்டு, சண்டை என்று மிகப் பழைய திரைக்கதை. புதுசா யோசிக்கங்கப்பா.
.
நகுல், ஒரு படம் ஓடிருச்சினா, என்ட்ரி ஆகும் போதே சண்டை, ஓபனிங் சாங் கலக்கல் போங்க. நடிக்கவும், உணர்ச்சிகளை காட்டவும் முயற்சி செய்யறீங்க. போக போக சிறப்ப நடிக்கலாம். நடிப்பும் "சித்திரமும் கைப்பழக்கமும்" மாதிரி தானே. ஆனா மசாலா வட்டத்துள் சிக்கிராதீங்க.

சுனய்னா, நடிப்பை பத்தி நமெக்கென்ன? நீங்க காட்சியில வந்தாலே போதும். (நீங்களும் அதத்தான் பண்றீங்க). அதுவும் அந்த "ஓடி ஓடி விளையாடு" பாட்டில நான் உங்கள மட்டும் தான் பார்த்துட்டு இருந்தேன்.

எம்.எஸ்.பாஸ்கர் தனியாவும், கருணாஸொட சேர்ந்தும், ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ் என்று அடிக்கும் லூட்டி, உலகமகா கொடுமை. தாங்கலடா சாமி. அப்பாலிக்கா சந்தானம் இருக்கிறார், ஹீரோவின் நண்பனாக. சந்தானம் முன்னேறுகிறார். உங்களுக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் சேர்த்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ் ட்ராக்கை தவிர்த்துவிட்டு சந்தானத்துக்கு கொடுத்திருந்தால் படத்தின் முதல் பாதி நல்லா இருந்திருக்கும்.

மேலும், ஓபனிங் சாங் அப்படியே "நாக்க முக்க" டிட்டோ, அதே காஸ்டியும், அதே ஸ்டெப்ஸ், இந்த பாட்டின் இசையும், வரிகளும் அதிஅற்புதம். போங்கடா டேய்..

கேமேராவை ஆட்டு ஆட்டுன்னு ஆட்டினா, படம் பரபரப்பா இருக்கும், பதற்றத்தை காட்சியில் கொண்டுவரலாம்ன்னு எவன்யா சொன்னான்? கண்களுக்கும் தலைக்கும் வலி.

இசை, இமான். "ஓடி ஓடி விளையாடு" கேட்க நல்லா இருந்தது. மற்ற பாடல்கள் சுமாருக்கும் கீழே. படத்திலும் அப்படியே.

மனோகர் என்ற ஒருவர் இயக்கி இருக்கிறார். படம் இயக்குவதற்கு படிப்பும் and/or அனுபவமும், பயிற்சியும் வேண்டும்ங்க. அடுத்த தடவ பெட்டரா பண்ணுங்க.
.
படத்தை வாங்கி வெளியிடுவது சன் பிக்சர்ஸ். (ஏதாவது தப்பா சொன்னா ஆட்டோ வருமா). உங்க கிட்ட பணம் நிறையா இருக்கு. நீங்க வெளியிடும் படத்தை ஜெயிக்க வைக்கும் திறைமையும், விளம்பர யுத்தியும் இருக்கு. நல்ல படங்களை ஜெயிக்க வைக்கலாமே. நல்ல படங்களை வாங்கி வெளியிடலாமே. நல்ல படங்கள் தயாராக ஊக்குவிக்கலாமே. நல்ல படங்களை நேரடியாகவே தயாரிக்கலாமே.
.
முதல் பாதி : அறுவை, கொடுமை, மொக்கை, எம்.எஸ்.பாஸ்கர், கருணாஸ்.
இரண்டாம் பாதி : ஓரளவுக்கு ஓகே.
(குடும்பத்தோடு செல்வதாயின் நம்பி செல்லலாம். முகம் சுளிக்க வைக்கும் எதுவும் படத்தில் இல்லை)
படம் இரண்டாம் பாதி காரணமாகவும், சன் பிக்சர்சின் விளம்பரம் காரணமாகவும் படம் சுமாரான வெற்றியை பெறக்கூடும்.
.
இப்படிக்கு,

அடுத்து வரப்போகும் நாடோடிகள், நந்தலாலா, ஆயிரத்தில் ஒருவன், கந்தசாமி படங்கள் நல்லா இருக்கணும் என்று எதிர்பார்க்கும் ஒரு சாதாரண தமிழ் சினிமா ரசிகன்.

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
13.06.2009

Friday, June 5, 2009

The Jacket [2005] - வாழ்வின் மீதான நம்பிக்கை..



IMDB Rating : 7.0/10

I was 27 years old the first time I died. இந்த வசனத்தோடு ஆரம்பிக்கிறது இத்திரைப்படம்.

ஒரு அமெரிக்க போர் வீரன் [Jack Starks], Gulf போரில், அந்நாட்டை சேர்ந்த சிறுவனால் தலையில் சுடப்பட்டு வீழ்கிறான். இறந்துவிட்டதாக கருதும் நேரத்தில் தற்காலிகமாக பிழைத்து கொள்கிறான். அம்னீசியாவால் பாதிக்கபடுகிறான். தன் சொந்த ஊரான வெர்மொன்ட் ஊருக்கு வருகிறான்.
.
னிக் கதை முழுதும் டிசம்பர் 25 - ஜனவரி 01 தேதிக்குள் [think of Winter, Christmas, New Year] நிகழ்வதால், அனைத்துக் காட்சிகளும் வெண்பனி போர்த்திய காட்சிகளாகக் கொள்ளுங்கள்.
.
1992-ஆம் ஆண்டின் வருட இறுதி நாட்கள். அன்றைய தினம் ஒரு வெண்பனி சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது ஒரு பழுதடைந்தக் காரையும், அருகில் ஒரு மிக அழகான சிறுமியையும் [Jackie], அழுது கொண்டிருக்கும் அவள் தாயையும் [Jean] பார்க்கிறான். Jean குடித்திருப்பாள் போலும். சிறுமியிடம் அறிமுகம் செய்து கொள்கிறான். காரை சரிசெய்து கொடுக்கிறான். சிறுமி கேட்டதற்காக தன்னுடைய dog tag chain-ஐ கொடுத்து விட்டு நகர்கிறான்.

மீண்டும் நடக்க ஆரம்பிக்கிறான். குளிர் அதிகமாக இருக்கிறது. ஒரு காரில் லிஃப்ட் கேட்டு பயணிக்கும் நேரத்தில், அக்காரை ஒரு காவல் துறை அதிகாரி வழிமறிக்கிறார். அக்காரின் சொந்தகாரன் ஒரு கிரிமினல் போலும். காவல் துறை அதிகாரியை சுட ஆரம்பிக்கிறான். காவல் துறை அதிகாரி சுட முயல, அது Jack Starks-ஐ தாக்கி அவனை மயக்கமாக்கி விழ செய்கிறது. அக்காரின் சொந்தகாரன், அந்த அதிகாரியை சுட்டு கொன்று விட்டு, அத்துப்பாக்கியை Jack-ன் அருகில், கைரேகைகளை அழித்துவிட்டு போட்டுவிட்டு செல்கிறான். பழி Jack மேல் வீழ்கிறது. Jack-க்கு எதுவும் நினைவில் இல்லை, Jean and Jackie பெயர்களை தவிர. இவன் கொலை செய்ததை கூட மறந்திருக்கக்கூடும் என்றுக் கருதி, இவனைக் குற்றவாளியாக்கி, ஒரு மனோ நல மருத்துவமனையில் இருக்க பணிக்கின்றனர்.

டிசம்பர் 25 1992. மனநல மருத்துவர் [Dr. Thomas Becker], அவர் கண்டுபிடித்த ஒரு மருந்தை Jack உடலில் செலுத்தி ஒரு ஜாக்கெட்டுக்குள் கை,கால் அசைக்கமுடியாதபடி சுற்றி, ஒரு ட்ரேக்குள் தள்ளிவிடுகிறார். அவர் இந்த மருந்து மிகுந்த மனநலம் குன்றியவர்க்கு அமைதி தரும் என்று நம்புகிறார். அம்மருந்தும் அச்சூழலும் ஒரு புது உலகத்தை அவனுக்கு கனவின் நீட்சியாக தருகிறது. ஒரு பனிக்கால வேளையில் எங்கு செல்வது என்பதுகூட தெரியாமல் நின்று கொண்டிருக்கும் அவனுக்கு ஒரு இளம்பெண் லிஃப்ட் தருகிறாள். அவனக்கு போக்கிடம் இல்லை என்பதாலும், கடுங்குளிர் காலம் என்பதாலும் அன்றைய இரவை அவள் வீட்டில் தங்கி கொள்ள சொல்கிறாள். அந்த இளம்பெண் எப்போதும் குடித்து கொண்டும் புகைத்து கொண்டும் மிக வருத்தத்தில் இருக்கிறாள். அவ்வீட்டில் எதேச்சையாக, அவன் தன்னுடைய dog tag chain-ஐ கண்டெடுக்கிறான். அதிர்ச்சியாகி, அவளிடம் கேட்க, அந்த இளம்பெண் தன்னை Jackie என்றும், இதை தன்னிடம் Jack Starks கொடுத்ததை சொல்கிறாள். இவன் தான்தான் Jack Starks என்று சொல்ல, நம்ப மறுக்கும் அவள், அவன் Jan 01 1993 அன்று இறந்துவிட்டதாக சொல்கிறாள். இவன், இந்த வருடம் என்னவென்று கேட்க, அவள் சொல்கிறாள் இது Dec 25 2007.

சில மணி நேரங்களுக்கு பிறகு இவன் ட்ரேவில் இருந்து வெளியே எடுக்கப்படுகிறான். கனவின் நீட்சி துண்டிக்கப்படுகிறது. புரியாமல் தவிக்கும் இவனுக்கு அங்கு தன் மனைவியை கொல்ல முயன்ற, மனோநலம் குன்றிய ஒருவன் [Mackenzie], அது உண்மையிலேயே எதிர்காலம் என்று சொல்கிறான். அவ்வப்போது இவனுக்கு ஆய்வு மருந்து செலுத்தப்பட்டு, ட்ரேவுக்குள் அடைக்கபடுகிறான். அப்பெண்ணை சந்திக்கிறான். அவள் துணையோடு இன்னும் ஐந்து நாட்களில் தான் சாக போவதை பற்றியும் அதன் காரணங்களையும் அறிய முற்படுகிறான்.

அவர்கள் இருவருக்குமிடையும் காதல் மலர்கிறது. மீண்டும் நிகழ்காலம். மீண்டும் எதிர்காலம். மீண்டும் மீண்டும் அம்மருந்தை இவனுள் செலுத்தி ட்ரேவுக்குள் அடைக்கபடும் போதெல்லாம்.[Dec 26 1992 to Jan 01 1993]. எதிர்காலத்தின் தன் காதலை காப்பாற்றி கொள்ள முயல்கிறான். புகைத்து குடித்து இறந்துவிடும் தன் தாயின் அன்பு கிடைக்காமல், தானும் புகைத்து குடித்து வாழ்கையை சிக்கலாக்கி கொண்டிருக்கும் தன் காதலி Jackie-யின் இறந்தகாலத்தையும் மற்ற முயல்கிறான். நினைத்ததை சாதித்து கொண்டானா. வாழ்க்கை என்பதின் மர்மம் என்ன? இத்திரைப்படத்தை காணுங்கள்.
.
படத்தின் பின்பாதியில் வரும் ஒரு காட்சியில், அவன் எதிர்காலத்தின் காதலி, நிகழ் கால சிறுமியின் வீட்டுக்கு செல்கையில், வீட்டு வாசலில் அச்சிறுமி Jackie-ஐ சந்தித்துக்கும் போது, கண்கள் பனிக்கிறது. பிரிவு நிமித்தமான அந்த காட்சி மனதில் ஒரு நீங்கா வலியை ஏற்படுத்துகிறது.
.
இந்த திரைப்படம் நம்ப முடியாத ஒரு கதை களத்தை கொண்டிருந்தாலும், வாழ்க்கை மீதான ஒரு தாக்கத்தை வெகுவாக பதிந்து செல்கிறது. படத்தின் காட்சிகள், மிக கூரிய வசனங்கள் மற்றும் அனைவரின் நடிப்பு மிக பெரிய பலம். வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையேயான ஒரு நம்பிக்கையை தரும் படம். வாழ சொல்லும் இந்த திரைப்படம், வெகுநாட்களாக மனதை அரிக்கும் குழப்பங்களை தீர்ப்பதாக இருக்கிறது. வாழ்வின் மீதான நம்பிக்கைகளை ஆழப்படுத்துவதாக இருக்கிறது இத்திரைப்படம், The Jacket.
.
"The important thing in life is to believe that while you're alive, it's never too late."
.
"When you die, there's only one thing you want to happen. You wanna come back."
.
டிஸ்கி: இந்த படத்தில் ஒரு சிறு பத்திரமாக வரும் Mackenzie பாத்திரத்தில் நடித்திருப்பவர் Daniel Craig. [ஜேம்ஸ்பாண்ட் நடிகர்].


IMDB LINK

My Rating : ****

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
06.05.2009

Monday, June 1, 2009

Big Fish [2003] - கதைகளாலான தந்தை...



IMDB Rating : 8.0/10 :: Top 250: #231

நல்ல படத்தை பார்க்க விரும்பும் அனைவரையும், இந்தப் படத்தை அவசியம் பார்த்துவிடுங்கள் என்று மிகமிகமிக வற்புறுத்துகிறேன். நீங்கள் அடுத்து பார்க்கப் போகிற படம் நிச்சயம் இதுவாக இருக்கட்டும்.
.
என் வாழ்க்கை சம்பவங்கள், உங்களுக்குக் கதை; உங்கள் வாழ்க்கை, எனக்குக் கதை.
.
Big Fish: A Novel of Mythic Proportions By Daniel Wallace-ஐ தழுவி Tim Burton-ஆல் எடுக்கப்பட்ட படமிது. Steven Spielberg-ஆல் இயக்கத்தில் வந்திருக்கப்பட வேண்டிய படமிது. அருமையான Adventure + Fantasy + Feel Good படம். அழகான ஒளிப்பதிவு. அற்புதமான பின்னணி இசை (பின்னணி இசைக்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது). அழகான சின்னச்சின்ன ஐடியாக்கள். வணிக ரீதியிலும் பெரிய வெற்றியை பெற்ற படமிது.

சின்ன வயது Edward Bloom-ஆக Ewan McGregor. பெரிய வயது Edward Bloom-ஆக Albert Finney (இவரின் குரல் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று.) அசத்தி இருக்கிறார்கள்.
.
Will Bloom-க்கு, தன் தந்தை Edward Bloom மேல் கோபமும் வருத்தமும். அது என்னவென்றால், Edward-க்கு எப்போதும் ஏதாவது ஒரு கதை. எங்கும் கதை. "நான் அப்படிதான்", "என் காலத்தில" இப்படி எந்த ஒரு சம்பவத்துக்கும் நிகழ்வுக்கும் ஒரு கதை சொல்ல துவங்கிடுவார். அக்கதைகள் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். அச்சம்பவங்கள்/கதைகள் சிறப்பாகவும் Fantasy + Adventure + Mystery ஆகவும் இருக்கும். மேலும் மிகுந்த புனைவுத்தன்மையாகவும் இருக்கும் (இயல்பு வாழ்க்கையில் நம்பவே முடியாதபடிக்கு).

மகன் Will-ன் திருமணத்தன்றும், அவர், தான் யாராலும் பிடிக்க முடியாத ஒரு பெரிய மீனை பிடித்ததாக ஒரு கதையை கூறி, திருமணத்திற்கு வந்தவர்களை சிறப்பிக்கிறார். ஆனால் இதேக் கதையை, இதை போன்ற இன்னும் பிற தன் தந்தையின் வாழ்க்கை கதைகளை கேட்டு அழுத்துவிட்ட மகன், தந்தையிடம் கோபித்து கொண்டு, தன் மனைவியோடு வேறு ஊருக்கு சென்றுவிடுகிறான். பின்பு அடுத்த மூன்று வருடங்கள் தன் தந்தையிடம் பேசவே இல்லை. அம்மாவுக்கும் மட்டும் அவ்வபோது தொலை பேசுவான்.

மூன்று வருடங்களுக்கு பிறகு தன் தந்தை உடல்நலம் குன்றி மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கடைசி காலத்தில் தந்தையோடு இருக்க விரும்பி மகனும் மருமகளும், Edward-ஐ பார்க்க வருகின்றனர். தன் தந்தை சொன்னக் கதைகளை அசை போடுகிறான்.

இப்போது Edward-ன் வாழ்க்கை, அவர் கதைகள் மூலம் நம் கண்முன் விரிகிறது. பிறந்தது. சிறு வயதாக இருந்தபோது ஊருக்கு வெளியே இருந்த Witch-ஐ சந்தித்தது, அவள் மூலம் தன் மரணத்தை பற்றி அறிந்து கொண்டது. ஊரை அச்சுறுத்திவந்த மிகமிக பெரும் உருவம் கொண்ட மனிதனை நண்பனாக்கி ஊரைக் காப்பாற்றியது. அந்நண்பனோடு ஊரைவிட்டு உலகத்தை explore செய்ய புறப்பட்டது. செல்லும் வழியில் யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் மறைந்திருக்கும் ஒரு அழகான நகரை கண்டுபிடித்து அங்கிருந்தது. பாதி பெண் உடல், பாதி மீன் உடல் கொண்ட பெண்ணை பார்த்தது. பின்பு அங்கிருந்து புறப்பட்டு, ஒரு பெண்ணை சந்தித்து காதல் வயப்பட்டு பின்பு அவள் யாரென்பதை கண்டிபிடிக்க படாதபாடு பட்டது. அவளை சந்தித்து தன் காதலை உணர்த்தி திருமணம் செய்துக்கொண்டது. ராணுவத்தில் சேர்ந்தது. இரு தலைகள் ஒரு உடல் கொண்ட பெண்ணை சந்தித்தது என பலக்கதைகள், கொஞ்சம் மிகைப் புனைவுகளோடு.

மகனின் வருத்தமெல்லாம் தன் தந்தையைப் பற்றி தனக்கு உண்மையாக தெரியாது என்பதே. தன் தந்தை சொன்ன மிகைப்புனைவுக் கதைகள் தன் தந்தையின் உண்மையான முகம் அல்ல என்று நம்புகிறான். தன் தந்தைக்கு இன்னொரு வாழ்க்கை இருக்குமோ (இன்னொரு மனைவி) என்றும் அதை மறைக்கவே இப்படி தன் இன்னொரு முகத்தை, தன் புனைவுக்கதைகள் மூலம் கட்டமைக்கிறார் என்று சந்தேகிக்கிறான். தன் தந்தையை வாழ்க்கையை அறிந்துக்கொள்ள சில இடங்களுக்கு சில உண்மைகளை அறிந்துகொள்கிறான். அக்கதைகளின் கதைத்தன்மையை அறிந்து, தன் தந்தையின் இறுதி நேரங்களில் அவரை அறிந்துகொள்கிறான்.

தன் தந்தை, மரணத்தில் எப்படி ஒரு பெரிய மீனாகிறார் என்பதை விவரிக்கிறான். தந்தையின் இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில், அவர் கதைகளில் வந்த பலரை சந்திக்கிறான். தன் தந்தை சொன்னக்கதைகள் பொய்யானவை அல்ல. கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவை, கொஞ்சம் Fine Tune செய்யப்பட்டவை என்பதை புரிந்துகொள்கிறான்.

பின்பு அங்கு பலரும் குழுவாக குழுவாக Edward-ஐ பற்றி பேச துவங்குகிறார்கள். இப்போது Edward கதையாகிறார்.
.
A man tells his stories so many times that he becomes the stories. They live on after him. And in that way, he becomes immortal.
.
இப்படத்தை பாருங்கள். படம் உணர்த்தும் விஷயங்கள் பல. உணருங்கள்.
ஒரு மாதம் ஆயிற்று இப்படத்தை பார்த்து. இன்னும் நெஞ்செல்லாம் நிறைந்திருக்கிறது இப்பெரிய மீன். An Adventure As Big As Life itself.

Big Fish Trailer

IMDB LINK

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
31.05.2009

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..