Sunday, May 31, 2009

தோரணை - திரைவிமர்சனம்


சென்னையில ரெண்டு பெரிய ரவுடிகள். ஒருவர் பிரகாஷ்ராஜ் மற்றொருவர் 'பொல்லாதவன்' கிஷோர். இருவருக்கும் தொழில் முறை போட்டி. இதற்கிடையில் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போன தன அண்ணனை கண்டுபிடிக்க அலங்காநல்லூர் கிராமத்திலிருந்து சென்னை வரும் 'புரட்சி தளபதி' விஷால். ஒரு கட்டத்தில் ஸ்ரீமானை தன் அண்ணனாக கருதி, ஸ்ரீமானைக் கொல்லவரும் கிஷோரிடம் மோதத்துவங்கி, பின் தன் உண்மையான அண்ணன் கிஷோர்தான் என்பதை கண்டுபிடித்து அவரை திருத்தி, அவரை பழிவாங்க துடிக்கும் பிரகாஷ்ராஜிடம் இருந்து தன் அண்ணனை காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை. இதற்கிடையில் நண்பன் சந்தானத்தோடு காமெடி, ஷ்ரியாவோடு காதல், தாய்பாசம் etc.,

அலாங்கானல்லூர் கிராமத்தில் இருந்து வரும் விஷால் கார் சேசிங்கில் கலக்குவது, துப்பாக்கிகளை இயக்குவது, பிரகாஷ்ராஜ்-கிஷோர் அனாயாசமாக துப்பாக்கிகளால் Gang War செய்வது, விஷால் அடித்தால் மற்றவர்கள் பல அடிகள் தாண்டிப்போய் விழுவது, அலங்காநல்லூர் கிராமத்தில் இருந்து ஓடிப்போன அண்ணனைத் தேடி, மதுரையோ திருச்சியோ கோயம்பத்தூரோ அல்லது வேறு மாநிலமோ செல்லாமல், சென்னைக்கு வருவது, இன்னும் பற்ப்பல லாஜிக் மீறல்களை, விறுவிறுப்பான திரைக்கதையையும், புதிதான காட்சிகளையும் கொண்டு மறைத்து, "கமர்ஷியல் மசாலா" வெற்றிப்படத்தை கொடுக்க முனைந்திருக்கலாம். ஆனால்........................

விஷால் : டாக்டர் விஜய், ரஜினியின் கமர்சியல் மற்றும் தெலுங்கு மசாலாவை காப்பி செய்து, கமர்சியல் ஹீரோவாகிவிட்டார். விஷால், விஜயை ஜெராக்ஸ் எடுக்கிறார். என்னக் கொடுமை சார் இது. கிராமத் திருவிழாவில் குதித்து வந்து ஓபனிங் சாங். பாடல் முழுதும் பூமாரி பொழியுது. துதி பாடும் வரிகள். படம் முழுதும் காமெடி, பாட்டு, பன்ச் டயலாக், திரும்ப காமெடி, பாட்டு, பன்ச் டயலாக், திரும்ப காமெடி, பாட்டு, பன்ச் டயலாக்- இப்படியாக கமர்சியல் நாயகனாக முயற்சி எடுக்கிறார். ஒண்ணியும் வேலைக்காவல. படத்தில் பட டயலாகுகளில் "தோரணை". தாங்கல.
மேலும் செல்லமே, சண்டைக்கோழி விஷால் முகம் மிஸ்ஸிங். குளோஸ்-அப் காட்சிகளில் அவர் முகம் பார்க்கவே பயமா இருக்கு. விஷால், ரொம்ப ஸ்மோக் பண்றீங்களோ???

ஷ்ரியா : படத்தில, ஷ்ரியாவ மட்டும்தான் பார்க்கற மாதிரி இருக்காங்க. அழகு + செக்ஸி.
சந்தானம் : விரசமா ரொம்ப இல்லாம, ஓரளவுக்கு நல்லா பண்ணி இருக்கார். சிரிக்க வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல்.
பிராகாஷ்ராஜ் : இந்த மாதிரி படங்களில் எல்லாம் நீங்க நடிக்கணுமா பிராகாஷ்ராஜ்? சரி சரி நடிங்க. இப்படி சம்பாதிக்கும் காசை வச்சுதானே நல்ல படங்களை தயாரிக்கிறீங்க.
விஷால், சந்தானம், பறவை முனியம்மா, மயில் சாமி, டி.பி.கஜேந்திரன், இவங்க எல்லாரும் ஒரே காலனிக்காரங்க. இவங்க காமெடி என்ற பெயரில் அடிக்கும் லூட்டி, உலகமகாக் கொடுமை...............முடியல..

பாடல்கள் ஓகே ரகம். "வா செல்லம்" பாடல் நல்லா இருக்கு. எல்லாப்பாடல்களிலும் ஷ்ரியா செக்ஸி.

படம் துவங்கும் போது "சண்டைக்காட்சிகள் அபாயகரமானவை. பயிற்சி பெற்ற ஆட்களால் வடிவமைக்கப்பட்டவை. நீங்கள் செய்து பார்க்காதீர்கள்" என்ற அறிவிப்பு வருகிறது. ஆனால் படத்தில சண்டைக்காட்சிகள் அப்படி ஒண்ணும் பெரிசா இல்லை.

கடைசியா விஷாலுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்பறேன் : சண்டைக்கோழி, மலைக்கோட்டை படங்களிலிருந்து வெளியே வாங்க.

தோரணை : செம ரோதனை :: படம் பார்த்தவர்கள் வேதனை

டிஸ்கி : ஆனாலும் ஒரு விஷயம், படம் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கு. படம் சுமாரான வெற்றியை பெறலாம். விஷாலின் "சத்யம்" போல் பெருத்தத் தோல்வியாக இராது என்று நினைக்கிறேன்.


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
31.05.2009

Thursday, May 21, 2009

The Truman Show [1998] - உலகம் ஒரு நாடக மேடை..


IMDB Rating : 7.9/10
.
உலகம் ஒரு நாடக மேடை; நாமெல்லாரும் நடிகர்கள்.
மேலிருக்கும் வாசகம் உண்மையாகவே இருந்தால் அது The Truman Show.
.
எனக்கு தனிப்பட்ட முறையிலும் மிகவும் பிடித்த நடிகர் Jim Carrey. இந்தத் திரைப்படம் ஒரு முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் அல்ல. இத்திரைப்படத்தில் அவ்வளவு கச்சிதமாக நடித்து இருக்கிறார் Jim Carrey. இத்திரைப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியையும், சிறந்த விமர்சனங்களையும் பெற்றத் திரைப்படம். மேலும் Existentialism மற்றும் Simulated Reality-உடன் இத்திரைப்படத்தை அணுகலாம்.
.
Truman, ஒரு சிறு தீவு நகரத்தில் பிறந்து, வளர்ந்து, (சிறு வயதிலேயே ஒருக் கடல் விபத்தில் தன் தந்தையை இழந்து,) படித்து, வேலையில் சேர்ந்து, ஒரு பெண்ணைக் காதலித்து, இன்னொருத்தியை மணந்து, மாலை வேளைகளில் தன் பால்ய நண்பனோடு பீர் அருந்திய படி பொழுதைக் கழித்து, ஒரு சாதரணமான நேர்க்கோட்டு வாழ்க்கையை (An ordinary routine life) வாழ்கிறான், நம்மில் பலரை போலவே.

தன் வாழ்க்கை ஏதோ ஒரு வட்டதுக்குள் இருப்பதாக தோன்றுகிறது. தன் வாழ்க்கை போரடிக்க துவங்க, உலகை சுற்றி பார்க்க விரும்புகிறான். குறிப்பாக தன் முந்தையக் காதலி சென்றுவிட்ட fiji-க்கு செல்ல விரும்புகிறான். ஆனால் அவனால் எங்கும் செல்ல இயலவில்லை. எங்கும் தடங்கல்கள்.
.
ஏன் அவனுக்கு இப்படி நடக்கிறது. ஏனென்றால் அவன் ஒரு 24x7 uninterrupted unedited live telecast show "Truman Show"-வின் நடிகன் என்பதே தெரியாமல் நடித்துக் கொண்டிருப்பவன். Truman-இன் எல்லா நிகழ்வுகளும், பற்பலக் கேமராக்கள் மூலம், 24x7 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி. உலகத்தின் அநேகர்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி. உலகத்தில் பெரிய வருமானம் கொண்ட நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியை வடிவமைத்தவர்கள், அவனை பிறந்தது முதலே தத்தெடுத்து, ஒரு செயற்கைத் தீவையே வடிவமைத்து, அங்கு அவனை வளர்க்கிறார்கள். அவனைத் தவிர்த்து எல்லாமே அங்கு செயற்கை. அவன் தாய், தந்தை, மனைவி, நண்பன், அக்கம் பக்கத்தினர், அவன் ஊர்க் காரர்கள், அந்தத் தீவு, அந்தக்கடல், நிலா, சூரியன், காற்று என நடிகர்கள். எல்லாமே வடிவமைக்கப்பட்டவை.
.
இப்படி தன் வாழ்க்கையே ஒரு நாடகம் என்றால், தன் வாழ்க்கை ஒரு செயற்கையான உலகத்தில் என்றால், தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் நடிகர்கள் என்றால்....
தன் வாழ்க்கையை அறிந்துக் கொள்ள விரும்பும் Truman, தான் யாரென்பதைக் கண்டுக்கொண்டானா என்பது மீதி திரைப்படம்.
.
உலகம் ஒரு நாடக மேடை; நாமெல்லாரும் நடிகர்கள். இது Truman-க்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும். நாமும் அதைத்தான் செய்துக்கொண்டிருக்கிறோம். நாம் யாரோ ஒருவரால் சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாக இருக்கிறோம். சாவி கொடுப்பதும் நாமேதான் சில சமயங்களில். நாம் பிறரிடம் அன்பு செய்வதாக சொல்கிறோம், பொய் சொல்கிறோம், வெறுக்கிறோம், காழ்ப்புணர்ச்சி கொள்கிறோம், துரோகம் செய்கிறோம், நடிக்கிறோம், முழுமனதோடு. நம்மிடமும் பிறர் அதையே செய்கின்றனர் அவர்களின் முழுமனதோடு.
.
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் இங்கு நடித்திருப்போம் ஓஓஓ


IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
21.05.2009

Sunday, May 17, 2009

சர்வம் - திரைவிமர்சனம்


ஏற்கனவே இதே தளத்தில் 21 Grams படத்தைப் பற்றி இந்த தளத்தில் எழுதி இருக்கிறேன்.. இந்த படத்திலிருந்து 21 Grams-ஐ எடுத்துக்கொண்டு படம் செய்திருக்கிறார் விஷ்ணு..

விஷ்ணுவர்தன், அனுவர்தன், நிரவ்ஷா, யுவன், ஸ்ரீகர் பிரசாத் கூட்டணியில் வரும் படங்கள் நிச்சயம் பார்க்கவே ஃப்ரெஷா நல்லா இருக்கும்.. இதை நம்பியே சர்வம் படத்துக்கு சென்றேன்..

ஆர்யாவுக்கு, திரிஷாவை பார்த்ததுமே காதல் பற்றி கொள்கிறது.. துரத்தித் துரத்து காதலிக்கிறார்.. திரிஷாவுக்கும் காதல் வருகிறது.. அதிலும் தனக்குக் காதல் வந்ததும் தனக்குள் ஏதேதோ மாற்றம் என்பதை உணர்த்தும் அந்த "நீதானே" பாடல் அதகளம்.. பின்னர் வரும் இரண்டு டூயட்டுகளும் அட்டகாசம்.. அதிலும் "காற்றுக்குள்ளே" பாடலில், ஆர்யா, த்ரிஷாவை கட்டிப்பிடித்து சுற்றும்போது, திரிஷா ஒரு பறவை போலவே காட்சியளிக்கிறார்.. நல்ல விஷுவல் ட்ரீட்.. நல்ல கெமிஸ்ட்ரி ஆர்யாவுக்கும், த்ரிஷாவுக்கும்.. இதைவிட திரிஷாவை அழகாக காட்டமுடியுமா என்பது சந்தேகமே.. மவுனம் பேசியதே-வுக்கு பின் திரிஷா - கனவு தேவதை.. :) திரிஷாவை பார்க்கும் போதெல்லாம் ஆர்யாவுக்குள் இளையராஜா வாசிக்கிறார்.. (சுப்ரமணியபுரம் பாதிப்பு இன்னும் போகல போல.)

இதற்கிடையில் இன்னொருக் கதை.. மனைவியையும் மகனையும் ஒரு விபத்தில் பறிகொடுக்கும் சக்கரவர்த்தி, அந்த விபத்தை செய்தவரின் மகனை கொல்ல முயற்சிக்கிறார்.. இதற்காக தன் மகனை பொத்தி பொத்தி வளர்க்கிறார் அவர்.. அந்த சின்னப் பையனுக்கு இருதய கோளாறு.. இடைவேளைக்கு முந்தைய காட்சியில், ஒரு விபத்தில் திரிஷா இறக்க, திரிஷாவின் இருதயம் பொருத்தப்படுகிறது.. இதனாலேயே தன் காதலியின் மீதான அன்பினால், அந்த சின்னப் பையனை, சக்கரவர்த்தியிடமிருந்து காப்பாற்றத் துணிகிறார் ஆர்யா.. காப்பாற்றுகிறார்..

ஒளிப்பதிவு நிரவ்ஷா.. விளையாடி இருக்கிறார். முதல் பாதி சென்னை, இரண்டாம் பாதி மூணாறு. அதிலும் மூணாறில் இரவில் படமாக்கப்பட்டக் காட்சிகள் செம.

படத்தின் பிரச்சனை என்னவென்றால், பாடல்கள். முதல் பாடல், திரிஷா இறந்த பின் வரும் டூயட் பாடல், பின்னர் வரும் ஒரு பாடல். மிகப் பெரிய பிரச்சனை இரண்டாம் பகுதி.. செம த்ரில்லராக இருக்க வேண்டிய படம் தோய்வாகிவிடுகிறது.. ஒரு grip மற்றும் விறுவிறுப்பு இல்லை. போதாக்குறைக்கு அந்த சின்ன பையன், அலும்பு பண்றான்..

தியேட்டரில் தொண்ணூற்றி ஐந்து சதவீதம் பேருக்கு படம் பிடிக்கவில்லை என்பதை படம் முடியும் போதே புரிந்தது.. சக்கரவர்த்தி கத்தும் போதெல்லாம், மக்கள் எல்லாம் கத்துகிறார்கள். விஷ்ணு, திரைக்கதை இன்னும் கொஞ்சம் நல்லா sleek-ஆ இருக்கணும். அடுத்ததடவை இன்னும் நல்லா பண்ணுங்க. அனுவர்தன், நீங்க செம கலக்கலுங்க.

விஷ்ணுவர்தன், அனுவர்தன், நிரவ்ஷா, யுவன், ஸ்ரீகர் பிரசாத், ஆர்யா, திரிஷாவுக்காக வேண்டுமானால் ஒருதடவை பாருங்கள். அல்லது விட்டுவிடுங்கள்.. மிஷ்கினின் நந்தலாலா பார்த்துக்கொள்ளலாம்.. :)

டிஸ்கி : இப்போதும் மீண்டும் உங்களுக்கு 21 Grams-ஐ பரிந்துரைக்கிறேன்.. நிச்சயம் பார்க்க முயற்சியுங்கள்..


மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
17.05.2009

Friday, May 8, 2009

The Count of Monte Cristo [2002] - துரோகமும் பழிவாங்குதலும்




"REVENGE is the reason I wake up each day - UnKnown"

இத்திரைப்படத்தின் கதையானது, துரோகத்திற்கு பழிவாங்குதல் என்ற மிகப் பழைமையான கதைதான் என்றாலும், உலகத்தின், மனித இனத்தின் மொத்த செயல்கூறும் வரலாறும் பழிவாங்கதலின் எஞ்சுதல்களே.. எனவே தான் இன்றும் சுவாரஸ்யமானதாக கவர்ச்சிகரமாக மனித மனங்களில் இருக்கிறது..

*******
Alexandre Dumas, père.-வின் The Count of Monte Cristo (Le Comte de Monte-Cristo, 1845–1846) நாவலை படமாக்கி இருக்கிறார்கள்..
IMDB Rating : 7.5/10

*******
பத்தொன்பதாம் நூற்றாண்டு துவக்கத்தில், ஃப்ரான்ஸில், நெப்போலியன் வீழ்ச்சியடையும் காலத்தில் நடக்கும் ஒரு கதை. செய்யாதக் குற்றத்திற்காக தன் உயிர் நண்பன் (செல்வந்தன்) துரோகத்தாலும், அந்நண்பனின் நண்பர்கள் (அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்) இருவரினாலும், வெறும் சிறைமட்டும் இருக்கும் ஒரு கல் தீவு சிறையில் அடைக்கப்படுகிறான், அப்பாவி ஏழை நாயகன்.. நாயகனின் காதலி, அச்சிறைக்கு சென்றவர்கள் நாடு திரும்பியதாக சரித்திரம் இல்லையென்பதாலும், அச்செல்வந்த நண்பனின் வார்த்தைகளாலும், அச்செல்வந்த நண்பனை திருமணம் செய்து கொள்கிறாள்..

வருடங்களாக சுரங்கப்பாதை தோண்டி, சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க முயற்சி மேற்கொள்ளும் போது, வேறு ஒரு சிறையின் பகுதிக்கு சென்று, அங்கு வயதான ஒருத்தரை (நெப்போலியன் ஆதரவாளர், படிப்பாளி, போராளி) சந்திக்கிறான்.. அவரிடம் பழக ஆரம்பித்து, அவரிடம் இருந்து எழுத படிக்க கற்றுக்கொண்டு, வாள்பயிற்சி/சண்டைபயிற்சி கற்றுக்கொண்டு, இருவருமாக சுரங்கப்பாதை தோண்டி தப்பிக்க முயற்சி செய்து, பின்பு அவர் இறந்து, இவன் மட்டுமாக அச்சிறையில் இருந்து தப்பித்து, கடற்கொள்ளையர்களை சந்திக்க நேர்ந்து, நட்பு கிட்டி, புதையல் தேடி, பெரும் Count-ஆக நாடு திரும்பி, தன் நண்பனையும், அவன் ஆதரவாளர்களையும் பழிவாங்கி, தன் காதலையும் மீட்டெடுக்கும் படம் தான், The Count of Monte Cristo..

*******
கொஞ்சம் நீளமான திரைப்படம் (2.15 மணி நேரம்) என்றாலும் மிக அருமையான CLASS திரைப்படம்.. ஒளிப்பதிவு, இசை - அழகு..

படத்தில் வரும் இடங்கள் அத்தனையுமே மிக அழகு.. படம் நாவலாகவே இருக்கிறது.. எனக்கு மிக மிக மிக பிடித்த திரைப்படம் இது..


IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
08.05.2009

Sunday, May 3, 2009

Duel [1971] - Steven Spielberg-ன் முதல் திரைப்படம்.


IMDB Rating : 7.7/10
.
ஒரு மனிதன், அவனின் கார், மற்றும் ஒரு பழையத் துருபிடித்த பார்க்கவே கோரமாக இருக்கும் நீளமான ட்ரக் மட்டும் கொண்டு ஒரு மிக விறுவிறுப்பானத் த்ரில்லரை திரையில் கொண்டுவரமுடியுமா? Steven Spielberg, முதல் படத்திலேயே செய்திருக்கிறார்.
.
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு, playboy பத்திரிக்கையில் வெளியான சிறுகதையை தழுவி, Steven Spielberg இயக்கிய முதல் திரைப்படம் இது Duel. இந்த திரைப்படம் ஒரு தொலைக்காட்சிக்காக TV version-ஆக எடுக்கப்பட்டு பின்பு கொஞ்சம் காட்சிகளை சேர்த்து theatre movie ஆக வெளியாகி, Steven Spielberg என்ற புகழ்பெற்ற இயக்குநரை அறிமுகப்படுத்திய திரைப்படம் Duel.
.
அமெரிக்காவின் பல மாகாணங்களை நீங்கள் திரையில் பார்த்திருக்கக்கூடும். பொட்டல் வெளி. ஒரு கோடு போட்டதை போல் நீளமான ஒரு சாலை. சில மைல்களுக்கிடையில் சிறு உணவகம் மற்றும் தொலைபேசி பூத் கொண்ட கேஸ் ஸ்டேஷன். இந்த சாலையில் நகரும் திரைப்படம் தான், இந்த திரைப்படம். ஒரு சின்ன விஷயம், எதேச்சையாக ஆரம்பித்து, பின்னர் கழுத்தை பிடிக்கும் ஆபத்தாகிவிடுகிறது என்பதாகிறது இத்திரைப்படம்.
.
இந்த திரைப்படம் உளவியல் ரீதியாக இரண்டு மனநிலையை (மனிதர்களை அல்ல; காரணம், இத்திரைப்படத்தில் இருக்கும் இருவரும் இரண்டு மனிநிலையின் மனித(கார் ஒட்டி மற்றும் ட்ரக் ஒட்டி) வடிவங்களே) காட்டுகிறது. இரண்டையும் பார்ப்போம். இப்போது நீங்கள் கீழே படிக்கப்போவதை, அப்படியே உங்கள் மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
.
1. நீங்கள், உங்கள் காரில், அவசர காரியமாக, மிக நீளமான out of city யாருமற்ற சாலையில் (highways) சென்றுகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு முன் ஒரு நீளமான ட்ரக், வழியை அடைத்துக்கொண்டு செல்கிறது. நீங்கள் அவசரமாக செல்ல வேண்டும். எனவே நீங்கள் ஓவர் டேக் செய்து முன்னேருகிறீர்கள். சில கணங்களில், இப்போது அந்த ட்ரக் உங்களை ஓவர் டேக் செய்கிறது. மீண்டும் நீங்கள் ஓவர் டேக் செய்கிறீர்கள். சில கணங்களில் மீண்டும் ட்ரக் உங்களை ஓவர் டேக் செய்கிறது. உங்களை ஓவர்டேக் செய்யவே விடமாட்டேன்கிறது மேலும் மெதுவாக சென்று பின்னால் வரும் உங்களை மெதுவாக செல்லவைக்கிறது. எப்படியாவது ஓவர் டேக் செய்ய வேண்டிய நிலை உங்களுக்கு. ஒரு அசந்த கணத்தில் நீங்கள் அந்த ட்ரக்கை ஓவர் டேக் செய்து விடுகிறீர்கள். இதனால் கோபமடைந்த அந்த ட்ரக் (அந்த ட்ரக்கை ஒட்டி செல்வது கூட யாரென்று தெரியாது உங்களுக்கு) உங்களை வேகமாக துரத்துகிறது, இப்போது நீங்கள் வேகமாக செல்லாவிட்டால் அது உங்களை இடித்து சிதைத்து விடும். உங்கள் காரின் பின்புறத்தை இடிக்கிறது. தொடர்ந்து, இடிக்க முயற்சித்து, உங்களையும் மிக வேகமாக காரை ஒட்டவைத்து (100mph) உங்களை பீதியில் ஆழ்த்துகிறது. நீங்கள் ஒரு மிகச்சிறு விபத்துக்குள்ளாகுகிறீர்கள். உங்களுக்கு முன்னால் சென்றுவிடும் அந்த ட்ரக்கும் நிற்கிறது. இதை யார் செய்வது என்று அறிய, நீங்கள் இறங்கி அந்த ட்ரக்கை நோக்கி நடக்கிறீர்கள். இப்போது அந்த ட்ரக் சென்றுவிடுகிறது. நீங்கள் உங்கள் காருக்கு திரும்பி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு, மீண்டும் பயணிக்க ஆரம்பிக்க, கொஞ்ச தூரத்தில் அந்த ட்ரக்கை காண்கிறீர்கள். மீண்டும் அதே கதை. உங்களால் அந்த ட்ரக்கை ஓட்டுவது கூட யாரென்று பார்க்கமுடியவில்லை. அடுத்த பெட்ரோல் பங்கில் தொலைபேசி, காவல் துறைக்கு தெரியபடுத்தலாம் என்றால், அந்த ட்ரக் அந்த தொலைபேசி பூத்தை இடித்து நொறுக்குகிறது. நீங்கள் உங்கள் காரை நிறுத்தினால், அந்த ட்ரக்கும் நிற்கிறது. நீங்கள் ஓட்ட ஆரம்பித்தால், அது உங்களை முன்னேறி செல்ல விடமாட்டேனென்கிறது. முன்னேறி செல்ல விட்டால், பின்னால் வேகமாக துரத்துகிறது.. என்ன செய்வீர்கள் நீங்கள்??
.
2. இதே சம்பவத்தை வேறு விதமாக பார்க்கலாம். இப்போது நீங்கள் அந்த கம்பீரமான ட்ரக்கை ஓட்டுபவர். மிக அசாத்தியமாக ட்ரக் ஓட்டும் சாமர்த்தியம் உண்டு உங்களுக்கு. உங்களை ஒரு சிறு கார் ஒன்று ஓவர்டேக் செய்து முன்னே சென்றுவிடுகிறது. உங்களுக்கு கோபம் வருமா? நீங்கள் அக்காரையும், அக்காரை ஒட்டி செல்லும் மனிதனையும் கொஞ்சம் பயமுறுத்தி பார்க்கும் ஆசை வராதா உங்களுக்கு?
.
இந்த படத்தை பார்க்கும் போது, 99% பேர் தங்களை காரோட்டியாக நினைத்து கொள்வர். என்பதாலேயே இத்திரைப்படம் ஒரு த்ரில்லராக மாறுகிறது. மேலும் அந்த கார் மற்றும் ட்ரக்கின் இரைச்சல் அந்த சூழ்நிலையை நம்முள் கிளர்த்துகிறது. கலவரம் செய்கிறது. மேலும் அந்த ட்ரக்கை ஓட்டுவது யாரென்பது கூட காட்டாமல் இருப்பது ஒரு சுவாரஸ்யமான ஒன்று. அந்த ட்ரக்கை ஓட்டுவது ஒரு கரடுமுரடான ஆளாக கூட இருக்கவேண்டியதில்லை, அவன் பலமெல்லாம் அந்த ட்ரக் மற்றும் ஓட்டும் திறமை.
.
பார்க்க ஆரம்பித்த சில கணத்திலேயே, பின்பு படத்தின் இறுதி வரை, தொண்டைக்கும், வயிற்றுக்கும் இடையே ஒரு த்ரில் உருண்டையை அனுபவிக்க முடிந்தது. படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பின்னணி சேர்ப்பும் மிக அபாரம். அந்த ட்ரக்கை வில்லனாகக் காட்டுவதே அந்த ட்ரக்கின் தோற்றமும் ஒளிப்பதிவும்தாம். பயமுறுத்துகிறது. மேலும், படத்தின் இடையில் ஒரு உணவகத்தில், அம்மனிதன், ஒவ்வொருவரையும் அந்த ட்ரக் ஓட்டியாக சந்தேகித்து வாங்கிகட்டி கொள்ளும் அந்த எபிசொட் த்ரில்லின் உச்சம்.
.
Duel - எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
தொடர்புடைய பதிவுகள் : Steven Spielberg - அசத்தும் ஆளுமை

IMDB Link

My Rating : *****
மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
03.05.2009

செல்வராகவனின் ”மயக்கம் என்ன” ட்ரைலர்

J.Edgar (2011) - First Official Trailer

Clint Eastwood & Leonardo DiCaprio - J.Edgar (2011) - First Official Trailer
 

Yet To Come.. :)

Lion of the Judah
hop

Hood Winked Too
hop

Winnie The Pooh
hop

Arthur Christmas
hop

Looted from Abdulla Bro

இரண்டு இலட்சம் ஹிட்ஸ்களையும், 300 ஃபாலோயர்களையும் பெற்றிடத் தட்டுத்தடுமாறி, முட்டிமோதிக் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தனிநபர் வலைப்பூவை மேய்ந்து கொண்டிருக்கின்றீர்கள்..